ஊட்டி : ஊட்டி அருகே கேத்தி பாலாடா – கெந்தளா சாலையோரங்களில் கான்கீரிட் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளதால் சுற்றுசூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது.
இங்கு அரியவகை வனவிலங்குகள், பறவை இனங்கள் இருப்பதுடன், உயிர்சூழல் மண்டலத்தின் முக்கிய அங்கமாக விளங்கக்கூடிய சதுப்பு நிலங்கள், நீரோடைகள் ஏராளமானவை உள்ளன. இவற்றை நம்பி கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பறவைகள் வரை உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேசிபி., இயக்க, ஆழ்துளை கிணறு அமைப்பது போன்ற செயல்பாடுகளுக்கு தடை உள்ளது. மேலும் நீரோடைகள் மற்றும் ஆறுகள், சதுப்பு நிலங்களில் கான்கீரிட் கழிவுகள் கொட்ட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடித்து அகற்றப்படும் பழைய கட்டிட கழிவுகள் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில் ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் இருந்து கெந்தளா செல்ல சாலை உள்ளது. இச்சாலை வனத்திற்கு நடுவே செல்கிறது. மேலும் நீரோடைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்நிலையில் காட்டேரி அணைக்கு அருகாமையில் உள்ள பகுதியில் சாலையோரங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இடித்து அகற்றப்படும் கான்கீரிட் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுசூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினரும் இதனை கண்டு கொள்ளாததால் கான்கீரிட் கழிவுகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கான்கிரீட் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.