புதுடெல்லி: மாநில அரசு மற்றும் அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்று கொண்ட நாள்முதலே அவர் மாநில அரசுக்கு எதிராக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் காலதாதமதம் செய்வது என்பது போன்ற செயல்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் மொழி தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் நேற்று ஒரு புதிய ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார். மாநில அரசோ அல்லது மக்களோ ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்தால் அதனை நிராகரிக்கிறார். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், இழுத்தடிப்பு செய்து வருகிறார். அவர் தனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்கள் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றதாக உள்ளது. ஆளுநர் பொறுப்பில் இருக்கும் அவர் அந்த பதவியில் விருப்பமின்றி செயல்படுவதுபோல் தெரிகிறது.
தமிழ்நாடு ஆளுநராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பது ஆண்டுக்கு ஆண்டு மோசமான முன்னுதாரணமாக சென்று கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டு வருகிறார். தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன்பாக அவையை விட்டு வெளியேறக் கூடாது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை மீறி செயல்படுகிறார். மாநில அரசு தயார் செய்து கொடுக்கும் உரையில் பல செய்திகளை படிக்க மறுக்கிறார்.
சட்டப்பேரவை உரையில் உள்ள திராவிட மாடல் என்ற சொல்லையும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதையும் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு ஆளுநர் உரை உண்மைக்கு மாறாக தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. அதேபோன்று நடப்பு ஆண்டில் சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுத்த உரையை படிக்காமல் தேவையில்லாத காரணத்தை கூறி அவையில் இருந்து வெளியேறி விட்டார். இது சட்டப்பேரவையை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமில்லாமல், ஜனநாயக செயல்பாட்டுக்கும் எதிரானது.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசு தரப்பில் இருந்து நியமனம் செய்யப்பட்ட அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார். அந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார் ஒவ்வொரு முறையும் அரசு அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்திட மறுப்பதோடு, முடிவெடுக்கவும் காலம் தாழ்த்துகிறார். இதனால் மாநில வளரச்சி திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. மேலும் திராவிட கலாச்சாரத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் ஆர்.என்.ரவி அவ்வாறு நடந்து கொள்வது கிடையாது. ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தை கடந்து அவர் செயல்படக் கூடாது என்பதை அவர் துளி அளவும் கருதவில்லை. எனவே அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான உரிய உத்தரவை குரியரசு தலைவர், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவைக்கு பரிந்துரையுடன் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.