புதுடெல்லி: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தியது. சுமார் 21 மாதங்கள் நீடித்த இந்த காலகட்டத்தில், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. இந்த நெருக்கடி நிலையின்போதுதான், இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் ‘சோசலிச’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ ஆகிய வார்த்தைகள் ஒன்றிய அரசால் சேர்க்கப்பட்டன. இந்த தினத்தை, ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு சமீபத்தில் அனுசரித்தது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, ‘அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து ‘சோசலிச’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும். நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். சிலர் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலைக் கையில் வைத்துக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், உங்களது (ராகுல்காந்தி) முன்னோர்கள் செய்த தவறுக்கு நாட்டு மக்களிடம் இன்னும் நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை.
மேலும், அவசர நெருக்கடி நிலையின்போது ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதையும், நீதித்துறை மற்றும் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டதையும், கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதையும் நினைவு கூர்கிறேன்’ என்றார். ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமூக ஊடகங்களின் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.