புதுடெல்லி: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அரசியலமைப்புச் சட்டமே மேலானது என்றார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசியக் கொடியை ஏற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும் உணர்ந்து கொள்வதற்காகவும், தேசத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவில் கொள்வதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று வங்கதேசத்தில் நடப்பதை பார்க்கும் போது, சுதந்திரம் என்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
சுதந்திரம் என்பதை சாதாரணமாக கருதுவது மிகவும் எளிதானது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். வழக்கறிஞர்கள் பலர் தங்கள் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு தேசத்துக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். அதேபோல் பல துறையை சார்ந்தவர்களும் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டமே மேலானது’ என்று கூறினார்.