தர்மபுரி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, ராகுல் காந்திதான் தூக்கி பிடிக்கிறார் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சொன்னம்பட்டி கிராமத்தில், மாற்றுக் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் அம்பேத்கரை வைத்துதான் அரசியல் நடைபெறுகிறது. அம்பேத்கருக்கு எதிராக பேசுபவர்கள், அம்பேத்கரை ஆதரித்து பேசுபவர்கள் என இரண்டு அணிகள் மட்டுமே செயல்படுகிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தினை, ராகுல் காந்தி எங்கு சென்றாலும் உயர்த்தி பிடிக்கிறார்.
பாஜவினர் அம்பேத்கருக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். ஆனால் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும், அந்த தெருவுக்கு தேர் வராது என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, ராகுல் காந்தி தூக்கி பிடிப்பது டாக்டர் அம்பேத்கரையே தூக்கிப் பிடிப்பது போன்றது.
இனி விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டில் ஒரு அரசியல் நகர்வும் கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக நாம் பெரிய உழைப்பை கொடுத்து இருக்கிறோம். பாஜ இந்து மதம்தான் பெரியது என்கிறது. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும், மதமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு இதுபோன்ற ஒரு சட்டத்தை, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கொண்டு வந்தார். அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அதனால் தான் எல்லோருக்கும் தூய தமிழ் பெயரை சூட்டினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.