சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பாஜவுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பாஜ அரசு – அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை.
இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பாஜகவினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்கி – ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள்.பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது ஆகும். அதற்கு முதலில் அவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இதையே தொடர்ந்து திமுக வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமையும் போதெல்லாம் செயல்படுத்திக் காட்டியும் வருகிறது.
* பெண்களுக்குச் சொத்தில் சம உரிமமைச் சட்டம்.
* பெண் காவலர்கள் நியமனம்
* அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு.
* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு.
* பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தது.
* ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது.
* ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு திமுக அரசு.
* கிராமப்புறப் பெண்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது கழக அரசு.
* மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம்.
* மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை – ஆகிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியது தி.மு.க. அரசு. இந்தத் தேர்தலில் முக்கியமானது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதுதான். ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற அளவிற்குத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. அதுதான் இன்று 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இவ்வளவு பெண்கள் அதிகாரம் பொருந்திய இடங்களுக்கு வந்து, தங்களது நிர்வாகத் திறனை மெய்ப்பித்துக் காட்டி வருகிறார்கள். இதையே நாடாளுமன்ற, சட்டமன்றங்களும் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. பிரதமர் ராஜீவ்காந்தி, உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தார்.
நாடாளுமன்ற – சட்டமன்றங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புகாகச் செய்தாலும், இப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக சார்பில் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன்.தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும்.