சென்னை: தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்; தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பலம் குறைக்கப்படும்.
தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்குமேல் தொங்கிக் கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கும். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 2026-ல் மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் குறைக்கப்படலாம். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும்.
நாடாளுமன்ற தொகுதிகளை உயர்த்தினால் அதன் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்படக்கூடும். தற்போதைய மக்கள் தொகைப்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள்தான் கூடுதலாக தமிழ்நாட்டுக்கு 21 கிடைக்கும். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அபாயகரமான செயல். தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். கட்சி எல்லைகளை கடந்து தமிழக நலனுக்காக அனைத்து தலைவர்களும் இணைந்து எதிர்க்க வேண்டும்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனைபோல் அமையும்
சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாட்டில் குரல் ஒடுக்கப்படும். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானது இல்லை; மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார்.