சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தமிழ்நாட்டிற்கு அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அப்படி ஒரு அதிகாரப்பூர்வமான முடிவை ஒன்றிய அரசு எடுக்கும்போது விதிகள் வகுக்கப்படும். எனவே தமிழகத்தின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்தே உள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்திற்கு தொகுதிகள் குறையும் என்று உத்தேசமாக நினைப்பதும், கூறுவதும் ஏற்புடையதல்ல. குறிப்பாக இந்தப் பிரச்னையை உறுதியாக அணுக வேண்டுமே தவிர உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக் கூடாது. எனவே தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாக உறுதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதில் உறுதி: ஜி.கே.வாசன் அறிக்கை
0