Tuesday, June 17, 2025
Home செய்திகள் தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

by MuthuKumar

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். மாநில உரிமைகளுக்கான சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் உறுப்பினர்களையும் கொண்ட சட்டமன்றத்தின் தீர்மானம்தான் வலிமையானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர் என்பவர் சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதலளிக்கக் கடமைப்பட்டவர் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதலளிக்காமல் காலவரையின்றி ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போட்டு வைப்பதோ, தன்னுடைய அதிகார வரம்பை மீறி ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதோ சட்டவிரோதம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய காலக்கெடு குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றியிருக்கும் அம்சமாகும். தமிழ்நாடு அரசின் வழக்கில் கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

தனிப்பட்ட முறையில் ஆளுநர், பிரதமர் என யாருடனும் எங்களுக்கு நேரடிப் பகையில்லை. அவரவர் பதவிக்குரிய மதிப்பை உரிய முறையில் அளித்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து பா.ஜ. ஆட்சி செய்யாத – ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுநர் மாளிகையும் பல்கலைக்கழகங்களும் ஜனநாயகம் வேட்டையாடப்படும் இடங்களாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் வாயிலாக தீர்ப்பைப் பெற்று ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுகிறது. ஆனாலும், ஒன்றிய பா.ஜ. அரசின் அசைன்மென்ட்டை நிறைவேற்றும் சட்டவிரோதப் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டின் ஆர்.என்.ரவி திருந்த மாட்டார் என்பதை ஒரு பொதுவிழாவிலேயே தெரிவித்திருக்கிறேன்.

மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். தற்போதைய ஒன்றிய பா.ஜ. அரசு தன்னை சுல்தானாக நினைத்துக் கொண்டு, மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறது. தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையைக் காரணம் காட்டி குறைக்கக்கூடிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அச்சுறுத்தலையும் ஜனநாயக விரோதப் போக்கையும் எதிர்கொள்ளவே ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் 3 பேரைக் கொண்ட ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழுவை அமைத்துள்ளோம். எங்கள் நோக்கம், மாநிலங்கள் அதிகார பலம் பெறும்போது ஒன்றிய அரசு வலிமையானதாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதுதான். அது நிச்சயம் நிறைவேறும். ஏனெனில், பா.ஜ.வே நிரந்தரமாக இந்த நாட்டை ஆளப்போவதில்லை. சர்வாதிகாரப் போக்கை காலம் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு.

நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று மாநிலங்களவையில் தனது முதல் பேச்சில் சொன்னவர் அண்ணா. அதனால் நாங்கள் மராத்தியர்களுக்கோ, வங்காளிகளுக்கோ, குஜராத்திகளுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதையும் அதன் தொடர்ச்சியாக அண்ணா குறிப்பிட்டார். அதையே கலைஞர், ‘உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்றார். தமிழ் மொழி இந்தியாவின் மூத்த மொழி என்பதை பல்வேறு அறிஞர்கள் – ஆய்வாளர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் செம்மொழித் தகுதி பெற்ற மொழியும் தமிழ் மொழிதான்.

இரும்புத் தாதினில் இருந்து அதனைப் பிரித்தெடுத்து இரும்புக்கருவிகள் செய்யும் தொழில்நுட்பம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது என்பதை அறிவியல்பூர்வமாக நிலைநாட்டியிருக்கிறோம். இத்தகைய பெருமைமிக்க ஒரு மொழியையும் அதன் மக்களையும் வாழ்த்துவதற்கு கூட பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ. அரசினருக்கு மனமில்லை என்றால் தமிழர்களை இந்தியாவின் இரண்டாம்தரக் குடிமக்களாக நினைக்கிறார்களா என்ற கேள்வி எழுவது இயல்பு. வடமாநிலங்களில் தனக்குள்ள செல்வாக்கே போதும் என்ற நினைப்பில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பா.ஜ. தொடர்ந்து வஞ்சிக்கிறது.

இந்தி மொழித் திணிப்பை ஏற்காததால் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் ஒன்றிய பா.ஜ. அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தரவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ. ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக்கூட பேரிடர் நிவாரண நிதியை உரிய முறையில் வழங்கவில்லை. 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடோ, வரிப்பகிர்வோ ஒன்றிய பா.ஜ. அரசால் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நலன் சார்ந்த சாதகமான எந்தத் தீர்வுக்கும் பா.ஜ. தயாராக இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.

எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்ய வேண்டுமே? அதுவும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கின்ற பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அரசியல் செய்ய ஏதாவது வேண்டுமே? அதற்காக அவர்கள்தான், நாட்டிற்கு அத்தியாவசியமான தீர்வுகளைப் பின்தள்ளிவிட்டு, பூதக்கண்ணாடி வைத்து குறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அமைதித்தன்மைக்கும் எவ்வித இடையூறுமில்லாத நிலையில், இடையூறு செய்ய நினைக்கும் அரசியல் சக்திகளின் சதிவேலைகளைக் கண்டறிந்து முறியடித்தும், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பாக மார்ச் 2021-இல் திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்‘ மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் என்று 7 உறுதிமொழிகளை வழங்கினேன். அந்த இலக்குகளை அடைவதற்கான பயணத்தில்தான் எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி, இன்று 9.69 விழுக்காட்டு வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டைத் தலை நிமிர்ந்து நடைபோட வைத்திருக்கிறோம். ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற சமத்துவ – சமூகநீதி லட்சியத்தோடு, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம்.

திமுக தன் கொள்கைக் கூட்டணியுடன் வலிமையாக இருக்கிறது. அந்த வலிமையை எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள், திமுகவை வீழ்த்தலாம் என்று எந்தவிதக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி சேர்ந்திருப்பதை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். திமுகவின் கொள்கைக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அ.தி.மு.க.வினர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்மையான பலனைத் தந்திருப்பதாலும் 2026ல் மீண்டும் வெற்றி பெறும் அளவிற்கு திமுகவும்-அதன் கூட்டணிக் கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. எதிரணியினர்தான் தங்களுக்குச் சவால் யார் என்பதைத் தேட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாநில உரிமைகளுக்கான குரல்
மாநில உரிமைக்கான குரலை 1957 முதலே திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறது. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய மாநில உரிமைக்காகப் பேசவில்லையா? கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான இடதுசாரி அரசு கவிழ்க்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டபோதும் அந்தந்த மாநிலங்களின் குரலாக ஒலித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போதும் மாநில உரிமைகளுக்கான நடவடிக்கைகளை தி.மு.க. மேற்கொள்கிறது. இது வெறும் தேர்தல் ஆதாயத்திற்கானதல்ல; நாட்டின் ஒருமைப்பாடு சிதையாமல் இருப்பதற்கான பாதுகாப்பு.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi