‘‘தர்மபுரி மாஜியை வீழ்த்த துருப்பு சீட்டு கிடைத்தும் நேரில் சந்தித்ததும் அமைதியாயிட்டாராமே இலைக்கட்சி தலைவரு என்ன காரணம்..’’ எனக்கேட்டார் பீடடர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவருக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும் தர்மபுரியை சேர்ந்த மாஜிக்கு கட்சிக்குள்ளே கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்காம்.. இலைக்கட்சிக்குள்ளாற நுழைந்த கொஞ்ச நாளிலேயே அவர் அனைத்து பொறுப்புகளையும் கைக்குள்ள கொண்டு வந்துட்டாராம்.. அவர் பார்க்காத பதவியே இல்லை என்ற அளவுக்கு செல்வாக்கை உயர்த்திக்கிட்டாராம்.. என்றாலும் அவருக்கு முன்பு கட்சிக்கு வந்தவங்க எதிர்பார்க்கும் மா.செ. பதவி கிடைக்கவில்லையாம்.. திண்ணை எப்போது காலியாகும், எந்நாளும் இலவு காத்த கிளியாகத்தான் இருக்கணுமா என்ற விரக்தியில இருக்காங்களாம்.. இந்த நேரத்துலதான் கட்சி கூட்டம் நடந்திருக்கு.. அதில், ஒவ்வொருவரும் கருத்துகளை சொல்லிக்கிட்டிருந்த நேரத்துல மாஜிக்கு எதிரான கோஷ்டியை சேர்ந்தவர்கள் தங்களது ஆசையை தெரிவிச்சிருக்காங்க.. நீறுபூத்த நெருப்பாக இருந்த பகை வெளிப்படையா வெடிச்சிருக்கு.. ரொம்பவே ஷாக்கான மாஜியோ, மா.செ. பதவியை பறிக்கணுமுன்னா இலைக்கட்சி பொ.செ. தான் எடுக்கணுமுன்னு சொல்லிட்டு போயிட்டாராம்.. இதுபோன்ற மோதலைத்தான் இலைக்கட்சி தலைவர் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தாராம்.. தனக்கு எதிராக 6 மாஜிக்களோடு வந்து, தேனிக்காரரை கட்சியில் சேர்க்கணுமுன்னு சொல்ல என்ன துணிவு வந்தது என்ற எரிச்சலில் இருந்தவருக்கு தர்மபுரி மோதல் தகவல் காதில் தேன்வந்து பாய்ந்தது மாதிரி இருந்ததா கட்சிக்காரங்க சொல்றாங்க.. கடந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் 5 தொகுதியையும் வெற்றிபெற வைத்தவர்தான் இந்த மாஜியாம்.. இதனால் நேரடியாக எதிர்க்க முடியாமல் இருந்த இலைக்கட்சி தலைவருக்கு, மாஜியை வீழ்த்த கிடைத்த துருப்பு சீட்டுதான் இந்த மோதலாம்.. இனி இந்த மோதலை வைத்து தனக்கு எதிராக யாருடனும் சேரமுடியாத வகையில் செக் வைக்கப்போறாராம்..
இந்நிலையில் மாங்கனி நகரில் முகாமிட்டிருந்த இலைக்கட்சி தலைவரை தர்மபுரி மாஜி போய் சந்திச்சிருக்காரு.. தனக்கு எதிரா நடக்கும் சதிகளை அப்போ பட்டியலிட்டாராம்.. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான ‘பசை’ இவரிடம் இருப்பதால் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தாராம் இலைக்கட்சி தலைவர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சென்னையை பரபரப்புக்குள்ளாக்கிய கட்சி தலைவர் கொலைக்கு சதி திட்டம் வகுத்த ரவுடிக்கு உடந்தையாக இருந்த ஜெயில் காக்கிகள் கலக்கத்தில் இருக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் சென்ட்ரல் ெஜயில்ல, பஞ்சாயத்துக்கும், பிரச்னைக்கும் குறையே இல்லாம இருக்குதாம்.. ஜெயிலுக்குள்ள போன், போதை பொருள்னு எல்லாமும் கிடைக்குதாம்.. இதனால ஜெயில்ல பணியாற்றுற காக்கிகள் ப விட்டமின் வாங்கிக்கிட்டு எல்லாத்தையும் கொடுக்குறாங்களாம்.. இது இல்லாம, கைதிகள் கொடுக்குற முக்கிய தகவல்களையும், வெளியே யார்கிட்ட சொல்லணுமோ அவங்ககிட்ட சொல்றதுக்கு தனி ரேட் பேசி வாங்குறாங்களாம் சிறை காக்கிகள்.. சென்னையில நடந்து பரப்பான கட்சி தலைவரோட கொலைக்கான சதி திட்டமும் வெயிலூர் ஜெயில்ல தான் நடந்துச்சாம்.. வெயிலூர் ஜெயில்ல இருந்து கூலி படைகளுக்கு அசைன்மென்ட் வழங்கப்பட்டதாக சொல்றாங்க.. இதுக்கு சிறையில இருக்குற கைதியான, பெயரில் எந்திரனை கொண்டவருக்கு ஜெயில் அதிகாரி ஒருத்தரு உடந்தையாக இருந்திருக்குறாருன்னு காக்கிகள் விசாரணையில தெரிய வந்திருக்குதாம்.. இதனால அந்த கைதிய கடந்த ஒரு வருஷத்துல யாரெல்லாம் வந்து பார்த்துட்டு போனாங்கன்னு பட்டியல் எடுத்து விசாரிக்க போறாங்களாம்.. அதோட அந்த கைதியோட தொடர்புல இருந்த ெஜயில்காக்கிகள் யார் என்ற பட்டியலும் சேகரித்து ரகசிய விசாரணை நடக்குதாம்.. இந்த விவகாரம் ஜெயில் காக்கிகள் மத்தியில கலக்கத்தை ஏற்படுத்தி இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வரி வசூலுக்கு ரேட் பிக்ஸ் பண்ணியிருக்கும் அதிகாரி காட்டுல பண மழை கொட்டுகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல வரி வசூல், புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், தொழில் வரி உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருது.. கொண்டலாம்பட்டி மண்டலத்தில் புதிய சொத்து வரி, பெயர் மாற்றம், தொழில்வரி உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கும் பப்ளிக்கிடம், அதை பரிசீலித்து வேலையை செய்ய, ஒவ்வொரு பணிக்கும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி, வசூல் வேட்டையில் வருவாய் பிரிவு அதிகாரி ஒருத்தர் ஈடுபட்டு வர்றாராம்.. அதுவும் பெயர் மாற்றத்துக்கு லட்சம் வரை கொடுத்தால்தான் வேலையே நடக்குதாம்.. புதிய சொத்து வரி போட, அவர் கேட்கும் பணத்தை கொடுத்தாலும் வரியை அதிகரித்து போட்டுவிடுறாராம்.. புதிய பணியாளர்களிடம், எந்த புதிய வரி, பெயர் மாற்றமும் செய்யக் கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டாராம்.. அதோட அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிறாராம்.. அதனால அவர் காட்டுல பண மழை கொட்டுதுன்னு கார்ப்பரேஷன் ஊழியர்கள் மத்தியில ஒரே பேச்சா இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி அமைச்சரின் நடவடிக்கை பற்றி மேலிட கவனத்துக்கு கொண்டு செல்ல நிர்வாகிகள் முடிவாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர், தற்போது சைலண்ட் மோடியில் இருக்கிறாரு.. மோசடி வழக்கில் சிக்கி நிபந்தனை ஜாமீனில் இருப்பதால்தான் இந்த திடீர் சைலண்ட்டுக்கு காரணமாம்… கட்சியில் முக்கிய நிர்வாகிகளை கூட சந்திக்காமல் இருந்து வருகிறாரு.. சிறையில் இருந்து வெளியே வரும் போது முக்கிய நிர்வாகிகள் வரவேற்க வரவில்லை. 2வது கட்ட நிர்வாகிகள் தான் வந்துருக்காங்க.. இதை மனதில் வைத்து, அந்த முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம்.. அதையும் மீறி அவரை சந்திக்க சென்றா ஒரு சில நிர்வாகிகளை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறாராம்.. இதனால் முக்கிய நிர்வாகிகள், அவரை சந்திப்பதற்கு தயங்குகிறார்களாம்… சிறையில் இருந்து வெளியே வரும்போது வரவேற்க செல்லாத ஒரு காரணத்துக்காக வீடு தேடி செல்லும் நிர்வாகிகளை அவமானப்படுத்தி அனுப்புவது முறை இல்லை.. சிறைக்கு சென்று ஜாமீனில் வந்ததில் இருந்தே மாஜி அமைச்சர் நடவடிக்கை சரியில்லை.. இதனால் மேலிட கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியதுதான்னு நிர்வாகிகள் முடிவு செய்துள்ளார்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.