ஊட்டி : ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை, பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை விடுமுறை மற்றும் வார விடுமுறை என நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில், சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஊட்டியில் மழையும் இன்றி வெயிலும் இன்றி மிதமான கால நிலை நிலவுகிறது. இந்த காலநிலை சுற்றுலா பயணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், நேற்று ஊட்டியில் உள்ள முக்கிய கடை வீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை மற்றும் பூங்கா சாலைகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், கமர்சியல் சாலை மற்றும் பூங்கா செல்லும் சாலை உட்பட முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டன. போக்குவரத்தை சீரமைக்க அனைத்து சாலைகளிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
எனினும், அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்ததால், ஊட்டி நகரம் மட்டுமின்றி அனைத்து சுற்றுலா தளங்கள் செல்லும் சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது. ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் பொதுவாக ஊட்டியில் வாகன நெரிசல் காணப்படும். ஆனால், கடந்த மூன்று நாட்களாக வழக்கத்தை காட்டிலும் அதிக வாகனங்கள் வந்த நிலையில், ஊட்டி – குன்னூர் சாலையில், லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து ஊட்டி நகருக்குள் வர சுமார் அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை ஆனது.
இது சுற்றுலா பயணிகளுக்கு பெரிதாக தெரியவில்லை. எனினும், அவசர தேவைகளுக்காக நகருக்குள் வந்த கிராமப்புற மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பெரும்பாலான அரசு பஸ்கள் அனைத்தும் நேற்று காலதாமதமாகவே கிராம புறங்களுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.