சென்னை: ராஜீவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலுத்தினர். சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை அலங்கரிக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், விஷ்ணு பிரசாத் எம்பி, பிரின்ஸ் எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வி.பி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், ஊடக துறை தலைவர் கோபண்ணா, மகளிர் அணி தலைவர் ஹசீனா சையத், ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர், ஓபிசி பிரிவு துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ், எஸ்சி பிரிவு துணை தலைவர் செ.நிலவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏழை, எளியோருக்கு அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து யாத்திரையாக கொண்டு வரப்பட்ட ராஜீவ் நினைவு ஜோதியை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பெற்றுக்கொண்டார். அதன் பிறகு நினைவேந்தல் உரை நடந்தது. இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.