சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளையொட்டி கலை இலக்கிய பிரிவு சார்பில் அதன் தலைவர் கே.சந்திரசேகர் தலைமையில் கவியரங்கம் மற்றும் வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், துணை தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இல.பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, இலக்கிய பிரிவு தலைவர் புத்தன், சூளை ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எம்.ஏ.முத்தழகன், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன்குமார், அடையாறு துரை, முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்: இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் காவிரியின் மூலம் வந்து கொண்டு இருக்கிறது. அதன்படி, கடந்த மாதம் 15 ஆயிரம் கனஅடி அளவிற்கு நீர் தமிழகத்திற்கு வரவில்லை. கர்நாடகாவில் நடக்கும் போராட்டங்கள் அங்குள்ள பாஜவின் அமைப்புகளையும் இயக்கங்களையும் வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது என போராட்டம் நடத்துகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை போராட்டம் நடத்துவது பாஜ அல்லது அதிமுக மட்டும்தான். இது திமுக – காங்கிரசுக்கு இடையான பிரச்னை இல்லை, இரு அரசாங்கங்களுக்கு இடையேயான பிரச்னை இல்லை, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாகும். அதனை தான் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன. தமிழகத்திற்கு ஒரு நிலையான தன்மை உள்ளது. நமக்கு உரிய தண்ணீரை நாம் பெறுவோம். நமக்கு வர வேண்டிய தண்ணீரை பெறுவதற்கான ஆற்றலும் அறிவும் தமிழக அரசுக்கு இருக்கின்றது. அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியும் உடன் இருக்கின்றது.