கோவை: கோவை விமான நிலையத்தில் காங்கிரசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டம் முடிந்தபிறகு இரவில் டெல்லி செல்வதற்காக கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை வழியனுப்ப, அங்கு கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள், காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு பிரிவாகவும், ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் கோவை செல்வன் தலைமையில் இன்னொரு பிரிவாகவும் நின்றுகொண்டிருந்தனர்.
கே.சி.வேணுகோபாலை வழியனுப்பிவிட்டு வெளியே வந்தபோது, மயூரா ஜெயக்குமாரின் கை, கோவை செல்வன் உடலில் பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் வந்த சக நிர்வாகிகளும் காது கூசும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.