ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். சட்டீஸ்கரில் வரும் நவம்பர் 7 மற்றும் 17 தேதிகளில் 2 கட்டமாக சட்டப்ே ீபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, 2 நாட்கள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சட்டீஸ்கர் வந்துள்ளார். முன்னதாக, ராய்ப்பூர் அருகே கைதியா கிராமத்துக்கு சென்ற ராகுல் அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் வயலில் இறங்கி நெல் அறுவடை செய்ய அவர்களுக்கு உதவினார். பின்னர், ராஜ்நந்தகோன் மற்றும் கவார்தா தொகுதிகளில் நடந்த பொது கூட்டங்களிலும் ராகுல் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் நிலமற்ற விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.7,000, வழங்கப்படுவது ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அவர்கள் அதானிக்கு கொடுக்கும் அதே தொகை சட்டீஸ்கரில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு வழங்கப்படும்.
டாக்டர் குப்சந்த் பாகேல் சுகாதார உதவி திட்டத்தின் கீழ், ஏழைகளின் இலவச மருத்துவ சிகிச்சைக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் என்பது ரூ.10 லட்சமாக உயர்த்தி அளிக்கப்படும். அதே போன்று, இதர பிரிவினருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.50,000 இலவச மருத்துவ சிகிச்சை தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்ததும் சட்டீஸ்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
* விழிப்புணர்வு மாரத்தான்
மாநில காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா, “சட்டீஸ்கரில் முதல் முறையாக 18 லட்சம் இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களே நாட்டின் எதிர்காலம் என்று நம்புவதால் அவர்களின் வாக்குரிமையை விளக்கும் வகையில் இன்று காலை 6 மணிக்கு தெலிபந்தா குளக்கரையில் இருந்து காந்தி மைதானம் வரை வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற உள்ளது. இதில் 18-25 வயது வரையிலானவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் மற்றும் நேரடியாக பதிவு செய்யலாம்,” என்று தெரிவித்தார்.