ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகையும், சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.500க்கும் வழங்கப்படும் என்று பிரியங்கா அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அடுத்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் காங்கிரஸ், பாஜ இடையேயான இருமுனை போட்டியினால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதனையொட்டி, ஜுன்ஜுனு மாவட்டத்தின் அர்தாவடாவில் நடந்த பிரசார கூட்டத்தில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா உள்பட மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, “ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். 1.04 கோடி குடும்பங்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.500க்கு வினியோகிக்கப்படும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த இன்னும் 10 ஆண்டுகளாகும். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசுகின்றனர். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அமைதி காக்கிறார்கள். ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. அதே நேரம், காங்கிரஸ் வாக்குறுதி அளித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன,” என்று கூறினார்.
* மோடியின் காலி பெருங்காய டப்பா…
பிரியங்கா மேலும் கூறுகையில், “தலைவர் என்பவர் உழைப்பவராக, செயல்படுபவராக இருக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு அறிவித்த நலத்திட்டங்கள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பளவுக்கு நீர் பாசன வசதி கிடைக்கும். மேலும் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள 13 மாவட்டங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,” என்று தெரிவித்தார்.
* பிரியங்கா மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்தில் புகார்
ராஜஸ்தானில் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி கொடுத்த கவரில் ரூ.21 மட்டுமே இருந்ததாக செய்தி வெளியானதாக பொய்யான கூற்றுகளினால் பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத பக்தியை இழிவுபடுத்திய பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்கள் ஹர்திப் சிங் புரி, அர்ஜூன் ராம் மேக்வால், மூத்த தலைவர்கள் அனில் பலூனி, ஓம் பதாக் அடங்கிய குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளது.