
சென்னை: ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘‘மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். ராகுலின்பேச்சு, குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தியுள்ளதாக கூறி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை காரணம் காட்டி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. எம்பி பதவி நீக்கப்பட்டுள்ளதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் அந்தந்த மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் சட்டப் பேரவைக்கு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதேபோன்று, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்களும் கருப்பு உடை அணிந்து வந்தனர். மேலும், சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்படி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று தமிழ்நாட்டின் 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். அதன்படி, மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இன்று காலை முதல் தமிழ்நாடு காங்கிரசார் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்நிலையில், சென்னையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரயிலை மறிக்கும் பேராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதற்காக வீரன் அழகுமுத்து கோன் சிலை அருகே ஏராளமான காங்கிரசார் திரண்டு நின்றனர். அவர்கள் அனைவரும் எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயில்களை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதன் ஒருபகுதியாக, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகரன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் சிவராமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று குரோம்பேட்டை ரயில்நிலையத்தில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் தலைமையில் தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை அப்புறப்படுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். திடீர் ரயில் மறியலால் குரோம்பேட்டை – சென்னை கடற்கரை இடையிலான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதேபோல மாநிலம் முழுவதும் 63 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. பல இடங்களில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் ரயில்நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்பி, எம்எல்ஏக்கள், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.