டெல்லி : ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விவகாரத்தில் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வரும் 12ம் தேதி அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் ஒன்றுபட்டு இருப்பதை காண்பிக்கும் விதமாக மாநில தலைநகரங்களில் ஒருநாள் அடையாள அமைதி போராட்டத்தை நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், வரும் 12ம் தேதி மாநிலங்களில் உள்ள தலைநகரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில் காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டத்தை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.இதனிடையே தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் மோடி என்றும் தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல்ரீதியாக செயல்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.