புழல்: ராகுல் காந்தியின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் கோரிக்கை குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ் தலைமையில், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் கண்டனம் ஆர்ப்பாட்டம் மற்றும் பிரதமர் மோடி திருவுருவ பொம்மை எரிப்பு போராட்டம் நேற்று மாலை செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இதில், உருவப் பொம்மை எரிப்பதற்கு செங்குன்றம் போலீஸ் எதிர்ப்பு தெரிவித்து அதை எடுத்து சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜிஎன்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை அப்புறப்படுத்தினார்கள். இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், மாநில செயலாளர் செங்குன்றம் சாந்தகுமார், மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.