நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பாளை பெருமாள்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் அவரது உறவினரும் முக்கிய அரசியல் பிரமுகரான தொழிலதிபரிடம் போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த மே மாதம் 4ம்தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்துகிடந்தார்.
இதுபற்றி நெல்லை தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் ஜெயக்குமார் அவரது கைப்பட எழுதியதாக கிடைத்த கடிதத்தில் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றதால் அதுகுறித்து விசாரணை நடத்தினர். ஆனால் ஜெயக்குமார் எப்படி இறந்தார் என எந்த துப்பும் துலங்க வில்லை. இதன் காரணமாக இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் 32 பேர் உட்பட 150 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதன்படி, பாளை பெருமாள்புரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து தினமும் சுமார் 4 முதல் 5 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதுவரை சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 125 பேர் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஜெயக்குமாரின் உறவினரும் முக்கிய அரசியல் பிரமுகரான திசையன்விளையை சேர்ந்த தொழிலதிபர் 2வது முறையாக சம்மனுக்கு நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு ஆஜரானார். அவரிடம் இன்ஸ்பெக்டர் உலகராணி, எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பெண் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.