திருவள்ளூர்: உச்ச நீதிமன்றம் ராகுலின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காங்கிரசார் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, மோடி பெயர் குறித்து ராகுல் முன் வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக குஜராத் பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுல் காந்தி எம்பி பதவியை மீண்டும் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக நேற்று மாவட்டத் தலைவர் துரைசந்திரசேகர் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் திருவள்ளூர், காமராஜர் சிலை அருகே காங்கிரஸார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன், மாநில செயலாளர் மோகன்தாஸ், நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் ஜான், மாநில நிர்வாகி வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் தளபதி மூர்த்தி, வட்டாரத் தலைவர் ராமஞ்சேரி பழனி, மாவட்ட நிர்வாகிகள் ரகுராம், உதயசங்கர், சரவணன், புங்கத்தூர் அருள், மனோகர் உமாபதி, பாபு கலை, ஜேக்கப், தாஸ், சண்முகம், சத்யா, பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டு ராகுல் காந்தி வாழ்க, காங்கிரஸ் வளர்க, ஒன்றிய பாஜ அரசின் அராஜகம் ஒழிக என கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆவடி: ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் விக்டரிமோகன், மேகலா சீனிவாசன், சிவகுமார், கணேஷ் பாபு, சௌகத் அலி, விக்டர் ஜெயக்குமார், கோதண்டன், மோகன ரங்கன், ராஜேஷ், பொன் பூபதி, ஆவடி தனா, மோகன்ராஜ், ஜலால், இப்ராஹிம், மனிஷ், டேவிட், முருகன், ஆகியோர் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே ஒன்று கூடி, ராகுல் காந்தி வாழ்க வென்றது, வென்றது நீதி வென்றது என்று கோஷங்கள் எழுப்பி அணி வகுத்து சென்று ஆவடி செக்போஸ்ட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சந்தோஷத்தை கொண்டாடினர்.