திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா எம்பியுமான வேணுகோபாலின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா தொகுதி எம்பியாக இருப்பவர் கே.சி. வேணுகோபால். ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான இவர், காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் ஆலப்புழா தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது ஆலப்புழாவில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் பின்னர் இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் டெல்லி சென்றுவிட்டார். இதனால் அந்த வீடு தற்போது வேணுகோபாலின் எம்பி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வேணுகோபாலின் உதவியாளர்கள் வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டுச் சென்றனர். நேற்று காலை மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் அலங்கோலமாக சிதறிக்கிடந்தன. வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாட்ச், காசோலை மற்றும் சில முக்கிய பைல்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆலப்புழா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.