கும்மிடிப்பூண்டி: காங்கிரஸ் மாவட்ட தலைவர் அறிமுகம் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றி ெவற்றி பெற வேண்டும் என துரை சந்திரசேகர் எம்எல்ஏ பேசினார். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்டார காங்கிரஸ் தலைவரும், புதுகும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலருமான மதன்மோகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி தலைவர் பிரேம்குமார் வரவேற்றார். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சம்பத், வட்டார தலைவர் பெரியசாமி, துணை தலைவர் சிவாரெட்டி, மணி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் புதிதாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பேசியதாவது:
நான் புதிதாக மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் இதற்கு அடிப்படை தொண்டர்கள் எனக்கு வாழ்த்துக்கள் கூறியும் சால்வைகள் அணிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்த்து கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டுமென பேசினார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.