புதுடெல்லி,: மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா பிரச்னை மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்றும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு உயர்தர வேலைகள் வழங்கும் வளர்ச்சி தேவை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பக்கோடா கடைகள் தேவை இல்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் 25 முதல் 29 வயது இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 15.5 சதவீதத்தை எட்டி உள்ளது. இது நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் வேலையின்மை இப்போது கொரோனா தொற்றின் போது இருந்ததை விட மோசமாக உள்ளது. 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 45.5% ஆக உயர்ந்துள்ளது.
30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூட வேலையின்மை விகிதம் மூன்று ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் நெருக்கடி அதிகமாகி வேறு வேலைகள் கிடைக்காததால் பல குடும்பங்கள் நூறு நாள் வேலை திட்டத்துக்கு செல்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தவறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.