புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், கடந்த 2024ம் ஆண்டில் சுமார் 3,37,630 இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றனர். அமெரிக்க கல்வி வளாகங்களில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள். இதன் பொருள் சுமார் மூன்றரை லட்சம் இந்திய குடும்பங்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பு மற்றும் கடன் வாங்கிய பணத்தை அமெரிக்காவில் தங்கள் குழந்தைகள் பயில்வதற்கு செலவிடுகின்றனர்.
இந்த மாணவர்களும் முந்தைய ஆண்டுகளில் அங்கு சென்றவர்களுக்கும் எதிர்காலம் நிச்சயமற்றதாகி உள்ளது. இந்த ஆண்டில் அங்கு செல்ல விருக்கும் மாணவர்களின் விருப்பங்களும் நிறைவேற முடியாமல் போகலாம். அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ள புதிய விசா நடைமுறை மாற்றங்களால், இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். மேலும், விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் சமூக ஊடக பக்கங்களை பரிசோதிப்பபதற்கு அமெரிக்க வெளியுறவு துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் இந்திய மாணவர்களின் கவலைக்கு ஒரு காரணம்.
குறிப்பிட்ட துறைகளில் பயிலும் சீன மாணவர்களை குறி வைக்கும் வகையில் விசா கொள்கை இருப்பதாக கூறி அமெரிக்கா மீது அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவது பற்றி பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் முற்றிலும் அமைதி காத்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.