புதுக்கடை: குமரி – கேரளாவை இணைக்கும் நான்கு வழிச்சாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்திய போது குன்னத்தூர் கிராம அலுவலகத்துக்குட்பட்ட காப்புக்காடு பகுதியை சேர்ந்த மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இழப்பீடு வழங்காமல் திடீரென்று மீண்டும் 4 வழிச்சாலை பணியை தொடங்கஅதிகாரிகள் காப்புக்காடுக்கு நேற்று வந்தனர்.
இதை அறிந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தலைமையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் வந்து அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். குளச்சல் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.