
சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில், ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கி வருகிறது. ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் மீது தொடுக்கப்படுகிற அடக்கு முறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவை திரட்டுவோம். அதற்காகத்தான் சென்னை வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டினோம்.
இந்த மாதம் முழுவதும் பாஜவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும். வருகிற 15ம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். 20ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இறுதியாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.