ஜல்பண்டா: சட்டீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் காஸ் சிலிண்டருக்கான ரூ.500 மானியம் மற்றும் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலம்,கைராகார் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட ஜல்பண்டாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசுகையில்,‘‘ சட்டீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். சுய உதவி குழுக்கள் மற்றும் சாக்ஷம் திட்டத்தின் கீழ் பெண்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் வரை இலவசமாக அளிக்கப்படும். முதல்வரின் சிறப்பு மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் சாலை விபத்துகள் மற்றும் திடீரென ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு முதல்வரின் சிறப்பு மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவை அளிக்கப்படும். மாநிலத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல் நிலை பள்ளிகள் சுவாமி ஆத்மானந்தா ஆங்கில மற்றும் இந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்’’ என்றார்.