புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ‘ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் அல்லது அற்ப அரசியலில் ஈடுபடாத தகுதியான நபர் ஒருமித்த கருத்துடன் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறி உள்ளார். கடந்த வாரம் தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் 4 முறை எம்பியாக இருந்தவருமான அபிஷேக் சிங்வி கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு அரசு நிறுவனத்தையும் இழிவுபடுத்தியது, மதிப்பிழக்கச் செய்தது, முக்கியத்துவத்தை குறைத்ததுதான். மாநிலங்களில் ஆளுநர் பதவி என்பதை ரத்து செய்ய வேண்டும் அல்லது அற்ப அரசியலில் ஈடுபடாத தகுதியான நபர்களை ஒருமித்த கருத்துடன் ஆளுநராக நியமிக்க வேண்டும். கோபால கிருஷ்ண காந்தி போன்றவர்கள் இதுபோன்ற அரசியல் செய்வார்களா? அவர் எங்கள் கட்சி சார்பாக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் என்பது மட்டுமல்லாமல், வரம்பு மீறாதவர், தவறு செய்யாதவர் என்பதால் குறிப்பிடுகிறேன்.
ஆனால் இன்று நாட்டில் என்ன நடக்கிறது. 10 முறை மசோதாவுக்கு அனுமதி தர மாட்டேன் என்கிறார் ஆளுநர். இறுதியில் நீதிமன்றம் சென்ற பிறகு மசோதாவை, குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார். இதனால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. உரிய முடிவுகளை எடுக்க முடியாது. மாநில முதல்வருக்கு சவாலாக ஆளுநர் மாறுகிறார் என்றால் ஆளுநர் பதவியை தான் நீக்க வேண்டும். ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் முதல்வர் தானே தவிர, ஆளுநர் அல்ல. மாநிலத்தில் இன்னொரு தலைமை நிர்வாகி போல் ஆளுநர் செயல்பட முடியாது. மேலும் ஒரே உறையில் 2 வாள்கள் இருக்க முடியாது. இந்த விஷயத்தில் அம்பேத்கர் உருவாக்கிய கொள்கையை, ஒன்றிய அரசு வெட்கமின்றி மீறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.