காஞ்சிபுரம்: ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் ஏசி மெக்கானிக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன காஞ்சிபுரம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் பின்புறம் உள்ள அரசமர தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சூர்யா (20). ஏசி மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்கள் 7 பேருடன் ஆர்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கல்குவாரி குட்டைகளில் தண்ணீர் அதிகளவில் இருந்தது.
இந்நிலையில், நண்பர்கள் குளிக்கும்போது சூர்யா கரையில் அமர்ந்து இருந்துள்ளார். உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் சிறிது நேரம் கழித்து சூர்யா அமர்ந்து இருந்த இடத்தை பார்த்தபோது, அவரின் ஆடைகள் மட்டும் இருந்துள்ளது. சூர்யாவும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரின் நண்பர்கள் சுமார் 1 மணி நேரம் தேடியும் சூர்யா கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து மாகறல் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், போட் மற்றும் பாதாள கொலுசு கொண்டு, தீவிரமாக தேடி சூர்யா உடலை சடலமாக மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாகறல் போலீசார், உடன் குளிக்கச் சென்ற நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.