‘‘இலையா, தாமரையா என ஏக குழப்பத்துல இருக்காமே தேனி குரூப்பு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இரட்டை இலையும், கட்சியும் யாருக்குன்னு நடந்த அதிகார யுத்தத்தில் தொடர்ந்து சேலம்காரருக்கு சாதகமாகவே எல்லாம் நடக்குதாம். லேட்டஸ்ட் நிலவரப்படி இலை சின்னத்தையும், கட்சி தொடர்பான லெட்டர்பேடை, தேனிக்காரரு யூஸ் பண்ணக்கூடாது என்று சொல்லி கோர்ட் குட்டு வச்சிருக்கு. அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி கோர்ட் நேரத்தை வீணடிக்கக் கூடாது… என்று தேனி குரூப்பை கோர்ட் எச்சரித்துள்ளதாம். இதனால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் தேனிக்காரர் தரப்பு கைகட்டி, வாய் மூடி இருக்காம். மேல்முறையீடு பண்ணி ஏதாவது பலன் கிடைக்குமா என்று காத்திருக்காம். இது ஒருபுறமிருக்க சேலத்துக்காரரின் சொந்த ஊரில் தேனி கோஷ்டியில் இருக்கும் சிலர், இனியும் இங்கே இருப்பது வேலைக்கு ஆகாது. அடுத்து எந்தப்பக்கமாவது சாய்ந்து விடலாமாஎன்று ஆழ்ந்த யோசனையில் இருக்காங்களாம். அவர்களின் மைன்ட் வாய்சை உணர்ந்து சேலத்துக்காரரின் அடிப்பொடிகள் தூண்டிலை வீசி இருக்காங்க. அதே நேரத்தில் தாமரை பார்ட்டிகளும் இவங்களுக்கு குறி வைச்சி இருக்காங்களாம். இதனால் இலையா, மலரா என்ற குழப்பத்தில் தேனிக்காரரின் கோஷ்டி இருக்காம். பசைக்கு ஏற்ப இவர்கள் திசை மாறுவார்கள். அதற்கான வாய்ப்புதான் அதிகம் என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சிக்காரர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஸ்வீட், பட்டாசு அமர்க்களம் ஏதும் இல்லாம அல்வா மாநகர காக்கி வட்டாரம் அமைதிப்பூங்காவா மாறிடுச்சுனு சொல்றாங்களே… உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. இந்த மாநகரத்தில் போலீஸ் கமிஷனர் பணியிடம் 3 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருக்காம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதிய கமிஷனராக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டாராம். பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு, பட்டாசு என அமர்க்களப்படும். அதுவும் போலீஸ் அதிகாரிகளுக்கு இனிப்புக்கும், பட்டாசுக்கும் குறைவே இருக்காது. ஆனால், அல்வா மாநகரத்தின் புதிய போலீஸ் அதிகாரி, ‘‘போலீஸ் ஸ்டேஷன்கள், உதவி கமிஷனர் அலுவலகங்கள், மாநகர போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் யாரும் இனிப்பு, பட்டாசு வாங்கக் கூடாது. தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு தான் முக்கியம். இனாம் வாங்குதை விட்டுட்டு ஒழுங்கா வேலையை பாருங்க…’’என கண்டிஷன் போட்டுள்ளாராம். இதை ரககியமாக கண்காணிக்கவும் ஒரு தனி டீம் அமைத்துள்ளாராம் புதிய போலீஸ் கமிஷனர். இதனால் தீபாவளி வசூலை மறந்து போலீஸ் அதிகாரிகள் பணியில் கச்சிதமாக இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாவட்ட தலைவர மாற்றம் செய்ததுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு கதர் கட்சியில போர்கொடி தூக்கி வர்றாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவல மாவட்டத்துல பட்டு நகரத்தோட எம்பி ஆக கதர் கட்சியை சார்ந்த பாற்கடல் கடவுளின் பெயரை முதல் பாதியாக கொண்டவர் இருந்து வருகிறார். இவர் கடந்த தேர்தலின் போது கூட்டணி பலத்தில் ஜெயித்து வந்தவர் மீண்டும் அதே தொகுதியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால் இதற்கு கிரிவலம் நார்த் மாவட்ட தலைவராக இருக்குறவரு தடையாக இருக்குறாராம். கடந்த எலக்ஷன்போது பட்டு நகரத்துல வெற்றி பெற சொத்தை விற்று செலவு செஞ்சாராம். ஆனா ஜெயிச்சி வந்த பிறகு தொகுதி நிதியின் மூலமாக பணிகளை வேண்டியவங்களுக்குத்தான் ஒதுக்கினாராம். இதைகேட்டதுக்கு ஏதேதோ பேசினாராம். இதனால, அந்த மாவட்ட தலைவரு வர்ற தேர்தல்ல நானும் போட்டி போடபோறேன்னு ெகாளுத்திபோட்டாராம். இதுக்கு மாநில தலைமையும் ஆதரவாக இருக்குறதா சொல்றாங்க. இதனால வர்ற எலக்ஷன்ல நமக்கு எங்கே சீட்டு கிடைக்காமல் போய்டுமோன்னு, பட்டு நகர எம்பி, டெல்லியில முகாமிட்டு மாவட்ட தலைமைக்கு தெரியாம, தனக்கு ஆதரவான ஒரு பினாமியை மாவட்ட தலைவராக போட்டுட்டாராம். இதனால, மாஜி மாவட்ட தலைவரோட ஆதரவு நிர்வாகிங்க எம்பிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்காங்க. புதுமாவட்ட தலைவருக்கு ஆதரவு கிடைக்காம திண்டாடி வர்றாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சி ஆதரவுடன் தர்பார் நடக்குது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படவில்லை. பல்கலைக்கழக பணிகளை துணைவேந்தர் பொறுப்புக்குழு செயல்படுத்தி வருகிறது. இந்த பொறுப்புக்குழுவில் கவர்னர் நியமித்த பெண் உறுப்பினர் எம்எஸ்சிதான் படிச்சு இருக்காங்களாம். இவங்க வாங்குன கவுரவ டாக்டர் பட்டத்தை பிஎச்டின்னு சொல்லிட்டு இருக்காங்களாம். இவரோட நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்காம்… பேராசிரியர்கள் சில பேர், கவர்னருக்கு புகார் மனுகூட அனுப்பி இருக்காங்களாம். இந்த நியமன உறுப்பினருக்கு பிஜேபி பின்னணி இருக்கு. இதனால்தான் அவங்கள கவர்னர் நியமன உறுப்பினரா செலக்ட் பண்ணாராம். பொதுவாக கவர்னர் நியமிக்கும் உறுப்பினர் கல்வியாளராக இருக்கணும், ஆனால் இப்படி கல்வியாளரா இல்லாதவங்கள ஏன் அவர் போடணும்ன்னு கேள்வி எழுந்து இருக்கு’’ என்றார் விக்கியானந்தா.