கர்நாடக அரசியலில் நிலவரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி என்று அறிவித்த பிறகு அக்கட்சியில் இருந்து பலர் விலகி காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இப்படியே போனால் நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமியும் அவரது சகோதரர் ரேவண்ணா மட்டுமே வேட்பாளர்களாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. இந்நிலையில், 2007ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ராம்நகரம் மாவட்டத்தில் உள்ள கனகபுரா மக்களவை தொகுதி முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு அரசியல் மறுவாழ்வு அளித்தது.
இதனால் மஜதவை பொறுத்தவரை இத்தொகுதி சென்டிமென்ட்டாக மாறிவிட்டது. இப்படி இருக்கையில், ஆயுதபூஜையின் போது ராம்நகரம் மாவட்ட மக்களுக்கு பரிசாக இம்மாவட்டத்தில் உள்ள ராம்நகரம், கனகபுரா, சென்னபட்டணா, மாகடியையும், பெங்களூருவில் உள்ள பசவன்குடி உள்ளிட்ட சில பகுதிகளை பெங்களூருடன் இணைத்து பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று அழைக்கலாம் என்ற யோசனையை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்தார். இதற்கு பாஜ, மஜத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் ராம்நகரம் மாவட்டத்தில் ஒக்கலிகர் சமூகத்தினர் வாக்கு வங்கி அதிகம். குமாரசாமியும், டி.கே.சிவகுமாரும் ஒக்கலிக சமூகத்தினர் என்பதால் தங்கள் பலத்தை காட்டுவதற்காக ஒரு மாவட்டத்தையே பலி கொடுக்க தயாராகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் ராம்நகரம் மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தை வீழ்த்தவே இப்படி ஒரு முடிவை டி.கே.சிவகுமார் எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. ராம்நகரம் மாவட்டத்தை யாராலும் பிரிக்க முடியாது. ஏழு ஜென்மம் எடுத்தாலும் அது நடக்காது. பெங்களூருவுடன் மீண்டும் அதை சேர்த்தால் மக்கள் கிளர்ச்சி ஏற்படும். நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று குமாரசாமி கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
குமாரசாமி தனது தந்தை தேவகவுடாவிடம் இருந்து கொஞ்சமாவது அறிவை பெற்றிருக்க வேண்டும். பெங்களூருடன் ராம்நகரம் இணைவதால் அங்குள்ள மக்கள் வளர்ச்சி காண்பார்கள் என்று டி.கே.சிவகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி டி.கே.சிவகுமார், குமாரசாமி இடையே நடந்து வரும் குடுமிப்பிடி சண்டையில் பாஜவும் அடிக்கடி மூக்கை நுழைத்து வருகிறது. ராம்நகரம் மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் டி.கே.சிவகுமார் தனது சொந்த ஊர் கனகபுரா உள்பட அனைத்தையும் பெங்களூருவுடன் இணைத்து அங்குள்ள மக்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்க விரும்புவதாக தெரியவருகிறது. அதே சமயம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பாஜ பொறுப்பல்ல. அவர்கள் கட்சி எம்எல்ஏக்களே பொறுப்பு என்று பாஜ தலைவர் யோகேஸ்வர் புதுகுண்டு போட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.