தன்னம்பிக்கை உள்ள ஒருவரின் பேச்சை மற்றவர்கள் கூடுதல் கவனத்தோடு கேட்கிறார்கள். அவரது சாதனை முயற்சிகளுக்கு உலகம் வழி விட்டு நிற்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் அலுவலகத்திலும், விழாக்களிலும் பொது இடங்களிலும் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து விடுகிறார்கள். அவர்களுடைய தோற்றமும் அங்கு அசைவுகளும் பேச்சும்தான் அதற்கு காரணம். உலகம் அவர்களுடையதாக மாறி விடுவதில் என்ன வியப்பு, தங்கள் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றவர்கள், தங்களுடைய செயலை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றோ தாங்கள் ஏற்கப்பட வேண்டும் என்றோ எதிர்பார்ப்பதில்லை. தங்களுடைய நம்பிக்கையைக் கொண்டே சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தடைகளைக் கடக்கிறார்கள், அடுத்தது என்ன என்று முனைப்புடன் செயல்படுகின்றார்கள்.மலையடிவாரத்தில் இருந்து கொண்டு அண்ணாந்து பார்ப்பவரும், சிகரத்தை சென்றடைபவரும் ஒரே மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.அவர்களிடயே ஒரே ஒரு வேறுபாடு உள்ளது. கீழே நிற்கின்ற ஆசாமி தன்னை சராசரி நபராக இரண்டாம் தரமானவராக எண்ணிக் கொண்டிருப்பதுதான்.குழந்தைகள் கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கித் தர வேண்டும் என்று அடம் பிடிக்கும்.அப்போது பெற்றோர்கள் இருக்கிற பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடு அதிகமாக ஆசைப்படாதே! என்ற அட்வைஸ் பண்ணுவார்கள்.பெரிய குழந்தைகளுக்கு ‘‘போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து” என்று அறிவுரை கூறப்படும், இளைஞனாகிய பின்பு ‘இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாதே’ என்று போதிப்பார்கள். வீட்டு பெரியவர்கள் பையன் புதிதாய் ஒன்றை முயற்சிக்கின்ற போது ‘உன்னுடைய லிமிட் உனக்கு தெரியணும்’ என அச்சத்தை மனதில் விதைத்து விடுவார்கள். வீட்டின் நிலைமை இப்படி இருந்தால் அவனுக்கு எப்படி பெரிதாய்க் கனவு காணத் தோன்றும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நான் வெற்றிக்கான படிகளில் ஏற முயற்சிப்பதில்லை. நாம் சட்டையை பின்னால் இருந்து இழுக்கவும். முன்னால் முட்டுக்கட்டை போடவும் ஆட்கள் இருக்கிறார்கள். உச்சியில் நிற்க இடம் இருக்காது என்று அவர்கள் சொல்லிச் சொல்லி நம்பிக்கை இழக்கச் செய்துவிடுவார்கள்.பிறகு எங்கே உயரங்களில் பார்வையைச் செலுத்தி உச்சிக்குப் போவது?உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது. நீங்கள் முறையாக எதையும் செய்யபவராயிருந்தால் உங்களுக்கு முடியாது என்று எதுவுமே இல்லை.நீங்கள் நேர்மறை சிந்தனை உடையவராக இருந்தால், அசாதாரண நம்பிக்கை பெறுவீர்கள். மற்றவர்கள் செய்யத் தயங்குவதை உங்களால் செய்ய முடியும். நாம் எதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோமோ அதை அடைகிறோம் என்பதில் உறுதியாக இருங்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.கமாண்டோ பெட்டாலியன் என்பது சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் அமைப்பின் ஒரு பிரிவாகும்.கோப்ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த பிரிவு, கொரில்லா மற்றும் வனப் பகுதிகளில் போர் புரிதல் ஆகியவற்றிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது. குறிப்பாக மாவோ தீவிரவாதிகளுக்கு எதிராக காடுகளில் போரிடுவது இதன் சிறப்பு. இதில் பணிபுரியும் வீரர்களை ‘ஜங்கிள் வாரியர்ஸ்’ என அழைப்பது வழக்கம்.இந்த பிரிவில் பணியாற்றும் மிக இளம் வயது பெண் தான் உஷா கிரண்.சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் கோப்ரா கமாண்டோ பிரிவில் பதவி வகிக்கும் முதல் பெண் என்ற பெருமை உஷாவிற்கு உண்டு.இவர் முதலில் சி.ஆர்.பி.எப் அமைப்பின் ஒரு பிரிவான 232 மகிளா பட்டாலியன் என்பதில்தான் 2014 ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜம்மு & காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாநிலத்தில் இயங்கும் ஆண்களுக்கான பிரிவில் சேர்ந்து பணியாற்ற இவர் விருப்பம் தெரிவித்தார். கடுமையான சூழல்கள் நிலவும் எந்தப்பகுதியிலும் சென்று போரிட துணிந்த வீரமங்கை இவர்.
இவர் ஒரு முன்னாள் தடகள வீரராகவும் திகழ்கிறார். ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் டெல்லியின் பிரதிநிதியாக தேசிய அளவில் கலந்து கொண்டிருக்கிறார்.நக்சல் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பஸ்டாரில் தற்போது பணிபுரியும் இரண்டே பெண் வீராங்கனைகளில் இவரும் ஒருவர். டெல்லியின்தென்மேற்கில் இருக்கும் குருக்ராம் பகுதியைச் சேர்ந்தவர் இவர்.தாத்தாவும்,தந்தையும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதனால் இயற்கையிலே இவருக்கு காவல் சீருடை மீது மோகம் இருந்து வந்திருக்கிறது.வேதியியல் பட்டதாரியான ஒரு பெண் இந்தச் சவாலான பணிக்கு வருவார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இவரை செல்லமாக இவரது ஊர்காரர்கள் பெண் சிங்கம் என்று அழைக்கின்றார்கள்.டெல்லியில் அணிவகுப்புகள் நடைபெறும் ராஜ் பத் பகுதிக்கு ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் உஷாவை அவரது தந்தை அழைத்துச் சென்று விடுவார்.அங்கே வீரர்களின் மிடுக்கான அணி வகுப்பு உஷாவை மிகவும் ஈர்த்தது. அப்போதிருந்தே சீருடை என்பது அவரை ஈர்க்கத் தொடங்கி விட்டது எனலாம்.காலம் செல்லச் செல்ல அவர்களின் பணி பற்றி தெரிந்து கொண்டார். வெறும் அணிவகுப்பு மட்டும் அவர்களின் வேலையல்ல என்பதையும் புரிந்து கொண்டார். அவர்களது பணி பெருமைக்குரியது என்பதை உணர்ந்தார்.உடலையும் மனதையும் மிக வலுவாக்கும் பயிற்சி கோப்ரா பயிற்சி ஆகும்.ஆண்களுக்காகவே கடுமையாக வடிவமைக்கப்பட்ட இந்த பயிற்சியின் போது பெண் என்பதற்காக எந்த சலுகைகளும் தரப்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓடி ஒரு இலக்கை அடைய வேண்டும் என்று தீர்மானிக்கபடும் தாமும். அதையே பின்பற்றி ஆக வேண்டும் என்பதோடு, சில நிமிடங்கள் அல்லது சில நொடிகள் கூட பெண்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்றும் சொல்கிறார் உஷா.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது, நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிரான ரெய்டுகளில் ஈடுபடுவது மற்றும் கிராமப்புறங்களில் சட்ட அமலாக்கம் ஆகியன உஷாவின் அன்றாட பணிகள் ஆகும். இவர் பல பெண்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். ஆயுதம் எந்திய சீருடைப் பணியில் சேர விரும்பும் பல இளம் பெண்களுக்கு இவர் முன்மாதிரியாக விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.தமது ஓய்வு நேரத்தில் மலைவாழ் மக்களின் பள்ளிப்
பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கிறார் இந்த பெண் சிங்கம். இவரைப் போல நீங்களும் சாதிக்க வேண்டும் என்றால்,உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள், அப்போது தான் வெற்றி குறித்து உங்களால் சிந்திக்க முடியும். அந்த வெற்றியை நீங்கள் அடையவும் செய்வீர்கள். அது தன்னம்பிக்கை என்னும் அற்புதம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.