வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்தால் துன்பங்களை முறியடித்து வெற்றியை எட்டுவது நிச்சயம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பக்குவம் ஏற்பட்டால், தடைகளைத் தாண்டி இலக்கை நோக்கிப் பயணம் செய்ய அது வழி வகுக்கும்.ஒரு மன்னர், வேட்டையாடிக் கொண்டிருந்தபோது கூரிய வாளால் அவரது விரல் துண்டாகிவிட்டது. மன்னர் வேதனையுடன் இருக்க, ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அமைச்சர் கூறினார். மன்னருக்கு கோபம் வந்து, அமைச்சரை சிறையிலிட உத்தரவிட்டார். அமைச்சரை வீரர்கள் அழைத்துச் சென்றதும், மன்னர் தனியே மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுவாசிகள், மன்னரைப் பிடித்து நரபலியிடத் தயாரானபோது, விரல் துண்டிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தனர். உடலில் குறைபாடு உள்ள ஒருவரை நரபலியிடுவது முறையல்ல என்று கூறி அவரை விடுவித்தனர். உடனே மன்னருக்கு ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற அமைச்சரின் வார்த்தை நினைவுக்கு வந்தது. விரல் துண்டிக்கப் படாமல் இருந்திருந்தால், இந்நேரம் தாம் உயிருடன் இருந்திருக்க முடியாது என்பதை உணர்ந்த மன்னர், அமைச்சரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டு, அவரிடம் வருத்தமும் தெரிவித்தார். உடனே அமைச்சர், ‘எல்லாம் நன்மைக்கே’ என்றார். உங்களுக்கு சிறைதண்டனை விதித்தேன். இதில் என்ன நன்மை இருக்கிறது?’ என்று கேட்டார் மன்னர்.
அதற்கு அமைச்சர் சிரித்துக் கொண்டே, “மன்னா, எப்போதும் காட்டுக்கு செல்லும் போது உங்களுடன் நானும் வருவது வழக்கம். ஆனால் இம்முறை நீங்கள் சிறையில் அடைத்ததால் என்னால் வர இயலவில்லை. ஒருவேளை நீங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால், அந்தக் காட்டுவாசிகள் உங்களை விடுவித்துவிட்டு என்னை நரபலி கொடுத்து இருப்பார்களே என்றார்.எனவே, சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள், பிரச்னைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நமது பணிகளை நேர்மறை எண்ணத்துடன் தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.ஜம்மு காஷ்மீரில் உள்ள லோய் தார் கிராமத்தைச் சேர்ந்த ஷீதல் தேவி. போகோமெலியா என்ற பிறவி நோய்க்குறைபாட்டால் கைகள் இன்றிப் பிறந்தார். தந்தை விவசாயி.தாய் ஆடு மேய்ப்பவர். மிக ஏழ்மையான குடும்பம். இரண்டு கைகளும் இல்லாமல், சின்னச் சின்ன தேவைகளுக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் கடினமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆனாலும் ஷீதல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாகத் திகழ்ந்தார்.
பள்ளி சென்றுகொண்டிருந்த அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியது 2021ம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வே. இந்த நிகழ்வின் போது ஷீதலின் விளையாட்டுத் திறமையை பார்த்து பலரும் வியந்துபோனார்கள். ராணுவ அதிகாரி ஒருவர் ஷீதலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, வில்வித்தை அகாடமியில் சேர்த்துவிட்டார். கைகள் இல்லை என்றாலும்,அவரின் உடலமைப்பு வலுவாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் வில்வித்தையில் அவரை பயிற்சிபெற ஊக்கப்படுத்தினர். அதற்குப் பிறகு ஷீதலின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.செயற்கை கை பொருத்தும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், தன்னம்பிக்கையை அவர் விடவில்லை.கைகள் இல்லாத ஷீதலுக்காகக் கால்களால் இயக்கக்கூடிய வில்லும் அம்பும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. உலக அளவில் கைகள் இன்றிக் கால்களால் வில்லை இயக்கும் முதல் பெண் என்கிற சிறப்பையும், பெருமையையும் பெற்றார் ஷீதல். ஆறே மாதங்களில் வில்வித்தையில் சிறந்த வீராங்கனையாக உருவானார். ஆரம்பத்தில் ஒரு வில்லை தூக்குவதுகூட கடினமாக இருந்த நிலையில் தொடர் பயிற்சியின் மூலமாக தினமும் 50-100 அம்புகளை வீசத் தொடங்கியவர், இப்போது ஒரே நாளில் 300 அம்புகளை வீசும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் என்னால் சரியாக தூக்க முடியவில்லை என்றார். ஆனால், இரண்டு மாதங்கள் பயிற்சி செய்த பிறகு, அது எளிதாக மாறியது. அவரது பெற்றோர் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து இருந்தார்கள். கிராமத்தில் உள்ள நண்பர்களும் அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தினர்.நான் வென்ற பதக்கங்கள் எல்லாம் இந்த உலகத்தில் நான் சிறப்பு வாய்ந்தவள் என்பதை நிரூபிக்கின்றன என்கிறார் ஷீதல்.இந்த பதக்கங்கள் எனக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் சொந்தமானது என பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு தன்னம்பிக்கை யுடன் பேசிய ஷீதலுக்கு பிடிக்காத ஒரே விஷயம் என்னவென்றால், அவருக்கு கைகள் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படும் மக்களின் முகங்களைப் பார்ப்பதுதானாம்.கால்களால் வில்லைப் பிடித்து, அம்பை எய்வது அவ்வளவு எளிதானது அல்ல. சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். ஷீதலிடம் அத்தகைய நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டதால் மட்டுமே மிகச் சிறந்த வீராங்கனையாக உருவாகிவிட்டார். அது மட்டுமல்ல அமெரிக்காவைச் சேர்ந்த கைகள் இல்லாத வில்வித்தைவீரரின் வீடியோக்களை அடிக்கடி போட்டுக் காட்டியது ஷீதலுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்கிறார் ஷீதலின் பயிற்சியாளர் குல்திப்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, சமீபத்தில் நடந்து முடிந்த செக் குடியரசில் நடைபெற்ற பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார் ஷீதல். இதுதான் ஷீதல் கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு ஷீதலுக்குக் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வளவு குறுகிய காலத்தில் பாராலிம்பிக் போட்டி வரை செல்லவிருக்கும் ஷீதலின் இந்த வெற்றி பயணம், உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்று. அவர் பெற்ற வெற்றிகள் பில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு ஒரு உத்வேகம். நம்மால் முடியாது என்று நினைத்து தங்கள் கனவுகளைப் பின்பற்றாத பலருக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார் ஷீதல்.
ஷீதலை கொண்டாடியுள்ள மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா, “நான் ஒருபோதும், என் வாழ்க்கையில் இனி எந்த பிரச்னைகளையும் சிந்திக்கப் போவதில்லை. ஷீதல் தேவி நீங்கள் எங்கள் அனைவருக்கும் பாடம் கற்றுத் தந்த ஆசிரியர். தயவு செய்து எங்களின் ஏதேனும் ஒரு காரைத் தேர்ந்தெடுங்கள், நாங்கள் அதை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஷீதலுடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் உடலில் குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் நம்முடைய மனதில் ஒருபோதும் குறைபாடு இல்லாமல், தன்னம்பிக்கை குறையாமல் செயல்பட்டால் வெற்றியை வசப்படுத்தலாம் என்பதே.