‘‘மாநாட்டுல காட்டுன சேவல் மேட்டர் தான் ஹாட் டாபிக்கா போயிட்டிருக்கு போல…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி விவகாரத்துல கோர்டு சமீபத்துல பிறப்பிச்ச உத்தரவு, தேனிக்காரருக்கும், சின்ன மம்மிக்கும் உற்சாகம் கொடுத்திருக்குதாம். இந்த உற்சாகத்தோடவே, கட்சியை கைப்பற்ற பல வகையிலயும் காய் நகர்த்தி வர்றாங்களாம். அதற்கேற்றபடி, மூத்த தலைவராக ஈரோட்டுக்காரர் ஒருத்தரு, சேலத்துக்காரருக்கு எதிராக கொடி பிடிக்க, இலை தொண்டர்கள் மத்தியில ஒருவித விரக்தி மனப்பான்மை தோன்றியுள்ளதாக பேசப்படுது. இதற்கு வலு சேர்க்குறமாதிரி, வெயிலூர்ல நடந்த மாநாட்டுல, மேடைக்கு பின்னாடி இருந்த தொண்டர் ஒருத்தரு, திடீர்னு தனது கையில இருந்த சேவலை தூக்கி பிடிச்சு காண்பிச்சு சத்தம் போட்டாரு. 1989ல் இலை கட்சி ஜா., ஜெ., என்று பிரிஞ்சபோது இரட்டைப்புறா, சேவல் சின்னம்னு 2 அணிகள் தேர்தல் களம் கண்டனது. அதேபோல, இப்பவும் இலை சின்னம் முடக்கப்படலாம்ன்ற அச்சத்தை காட்டுவதாக, மாநாட்டுல காட்டுன சேவல் மேட்டர் இருக்குதேன்னு பேசு பொருளாக மாறியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி மந்திரியின் புலம்பல் அதிகமா இருக்குதுன்றாங்களே.. என்னா விஷயம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தின் இலைக்கட்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சரான மீசைக்காரரின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சராக இருந்தபோதே கடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தராமல் புறக்கணித்தது. இந்த வாய்ப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மாவட்ட செயலாளர் பதவி தனக்கு தான் வரும் என காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம். இதனால், சில காலமாக கட்சி பக்கம் தலை காட்டாமல் தலைமறைவு நிலையில் இருந்தார். தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி நிகழ்வுகளிலும், கட்சிக்காரர்கள் வீட்டு விசேஷங்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். மீண்டும் தலைமை சீட் தருமென நம்பிக்கையுடன் உள்ளார். அதே நேரம், ‘தேர்தலில் நின்னு பிரியாணி, குவார்ட்டர், பணம் என தண்ணியா செலவிட்டாலும், மக்கள் திடீரென ஓட்டை மாத்தி போட்டு விடுறாங்க… இப்பவே இந்த செலவுகளை சமாளிக்க முடியலை. வரும் காலத்தில் செலவு மேலும் எகிறும்… இங்க நாம ஜெயிக்க முடியாதுன்னு நம்ம கட்சிக்காரனே, நம்ம காதுல கேட்குற மாதிரி பேசுறாங்க… என்ன செய்றதுன்னு தெரியல’ என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் மாஜி மீசைக்காரர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘பிரச்னையை காது கொடுத்து கேட்காத குக்கர் தலைவர் மீது அதிருப்தியில் இருக்காங்களாமே கட்சி நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்திற்கு குக்கர் தலைவர் வந்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு வருவதால் வரவேற்பு பலமாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஆள் ரொம்ப குறைவு. வாடிப்போனார் குக்கர். இந்த சமயத்தில் நிர்வாகிகள் அவரை சந்தித்து, தனித்தனியாக பல கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் குக்கர் தலைவர் அதை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. இதனால் நிர்வாகிகள் அப்செட்டில் வெளியில் வந்தனர். ‘சட்டமன்ற, எம்பி தேர்தலுக்கு பிறகு எந்தவித கவனிப்பும் இல்லாததால் பல நிர்வாகிகள் கடும் மனவருத்தத்தில் இருந்தோம். கட்சியில் பல பிரச்னைகளை சந்தித்தோம்…. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த குக்கர் தலை எங்களை கண்டுக்கவே இல்லை. போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டார் என நிர்வாகிகள் புலம்பினர். இதனால 2026 தேர்தலுக்கு முன் தாய் கட்சியான இலை கட்சி அல்லது மாற்று கட்சிக்கு தாவி விட பல நிர்வாகிகள் முடிவு செய்திருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுவை விவகாரம் என்ன…’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் மக்கள் குறைதீர்வு கூட்டம் சமீபத்தில் நடந்ததாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு உள்ளூர் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லையாம். கடந்த காலங்களில் வரவேற்பு பிரகாசமாக இருந்தபோதிலும், நிர்வாகத்திடம் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை முழுமையாக எடுக்கப்படாததே வரவேற்பின்மைக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டதாம். அதாவது புதுச்சேரியின் மற்றொரு பிராந்தியமான காரை மாவட்ட நிர்வாகத்துக்கு வானளாவிய அதிகாரமுள்ள நிலையில் அங்கு மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு கூடுதல் வரவேற்பு உள்ளதாம். ஆனால் புதுச்சேரியிலோ மாநில நிர்வாகி, அமைச்சரவை, உயர் அதிகார ஆளுமைகள் இருப்பதால் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை எடுபட வில்லையாம். மனுக்கள் மீதான தீர்வுக்கு முட்டுக்கட்டை வந்ததோடு, தடைகளும் போடப்பட்டதால் படிப்படியாக வரவேற்பு குறைந்துவிட்டதாம். மனு கொடுக்க வந்தவர்களில் பலர், ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீதே நடவடிக்கை இல்லை என்று தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டு சென்றார்களாம். இதனால்தான் தற்போதைய கூட்டம் பிசுபிசுத்து விட்டதாக நிர்வாகம் புலம்புகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மம்மி சிலைக்கு மாலைபோட வரிசையா வரணும்னு கண்டிஷன் எல்லாம் போட்டிருக்கிறதா பேச்சு ஓடுதே..’’ என சந்தேக தொனியில் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் மாநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளரின் கை ஓங்கியிருக்காம். வட்ட செயலாளரில் இருந்து மாவட்ட செயலாளரின் பதவிகளை பறித்தது இவருதான் என அவரை புதிய நிர்வாகிகள் புகழ்ந்து பேசுறாங்களாம். ஆனால் பொறுப்பாளரோ நான் எதையும் செய்யல.. பொதுச்செயலாளருதான் செஞ்சாருன்னு தன்னடக்கத்தோடு சொல்றாராம். அவரது சீரமைப்பு பணியை பார்த்து மாநகர நிர்வாகிகள் நெஞ்சடைத்து போய் இருக்காங்களாம்.. மம்மி சிலைக்கு மாலை அணிவிக்கப்போகிறோம் என்றால், ரெண்டு வரிசையா முக்கிய நிர்வாகிகள்தான் நிக்கணும். முண்டியடித்துக்கொண்டு யாரும் உள்ளே வரக்கூடாதுன்னு ஒரு வாய்மொழி உத்தரவையும் போட்டிருக்காராம். சமீபத்தில் மாலை அணிவிக்கும் போது, இவ்வாறு வரிசையாக நிக்கவச்சிக்கிட்டு இருந்தாராம். முக்கிய நிர்வாகி ஒருவர், இடையில் ஜம்முன்னு போய் நின்னுட்டாராம். ஏற்கனவே பதவி பறிபோனவர்கள் நம்மை வசைபாடுறாங்க.. இதற்கிடையில் இடையில் நின்றவரை ஏன் அப்புறப்படுத்தணுமுன்னு கையை விரிச்சிக்கிட்டு ஓரமா நின்றாராம். என்றாலும் இதை அப்படியே விட்டுவிட கூடாதுன்னு நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி மம்மி சிலைக்கு மாலைபோடும்போது வரிசையா நிக்கணுமுன்னு சொன்னாராம்.. அப்படின்னா மம்மி சமாதிக்கு மாலைஅணிவிக்க போகும்போது பொதுச்செயலாளரை நெருக்கி தள்ளிக்கிட்டு போறாங்களே அதை யார் ஒழுங்கு படுத்துகிறதுன்னு கேள்வி எழுப்புறாங்க ரத்தத்தின் ரத்தங்கள்.. அதே போல அழுக்கடைந்த மம்மி சிலையை துடைத்தவரை பார்த்து மெய்சிலிர்த்தும் போனாராம் அந்த பொறுப்பாளர். இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாநகரில் போய்கிட்டிருந்தா.. புறநகரில் வேற லெவலாம்.. சமீபகாலமாக இலைக்கட்சி தலைவர் திருமண வீட்டுக்கெல்லாம் போய் மணமக்களை வாழ்த்திட்டு வாறாராம். அதுவும் ஒருசில எம்எல்ஏக்களுடன்தான் போறாராம். ஆனால் அவரது நிழலானவரரோ தலைவர் கூட போகாம தனி ஆவர்த்தனம் பண்றாராம். அதுவும் 15க்கும் மேற்பட்ட கார்களுடன், ஆறுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் புடைசூழத்தான் செல்வாராம். இதனை பார்க்கும் கட்சிக்காரங்க யாருக்கு பவர் அதிகமுன்னு பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
மாநாட்டில் சேவலை காட்டி பீதியை கிளப்பிய ரத்தத்தின் ரத்தத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0