சென்னை: கிராமப்புற தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து, 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, காங்கிரசார் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில், சென்னை அண்ணா சாலை தர்கா, தாராபூர் டவர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச் செயலாளர்கள் கே. சிரஞ்சீவி, ஏ.வி.எம்.ஷெரீப், மன்சூர் அலி, நிலவன், சூளை ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இதேபோன்று, ராயப்பேட்டையில் காங்கிரஸ் சேவதாள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.