செங்கல்பட்டு: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் செங்கல்பட்டில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. ஒன்றிய அரசு தொழிலாளர் சட்ட தொகுப்பை அமல்படுத்த கூடாது, நிரந்தர வேலையில் பணிபுரியும் நிரந்தர மற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து தொழில்களிலும் 10 விழுக்காட்டுக்கு மேல் தற்காலிக தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்திட வேண்டும், பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆகஸ்ட் 9ம் தேதியன்று சென்னையில் பெருந்திரள் அமர்வு இயக்கம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று செங்கல்பட்டில் ஆயுத்த மாநாடு நடைபெற்றது. எஐடியுசி மாவட்ட பொது செயலாளர் ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் வரவேற்றார், எல்பிஎப் மாவட்ட செயலாளர் கண்ணன் அறிமுக உரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி எல்பிஎப் பேரவை பொருளாளர் நடராஜன், செயலாளர் பொண்ணுரங்கம், எஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிஐடியு மாநில துணை செயலாளர் கோபிகுமார், எஐடியுசி மாநில செயலாளர் ரவி, எஐசிசிடியு மாநில துணைத் தலைவர் ஆபிரகாம், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் செந்தில்நாதன், எல்டியுசி மாநில துணை தலைவர் கோபால் உள்ளிட்ட பலர் பேசினர்.