கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே, பெரியதள்ளப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், 2 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், 11ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் அருண்ராஜை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சரயு உத்தரவிட்டார். கட்டிட ஒப்பந்ததாரர் சின்னதம்பி, வரும் காலங்களில் பணிகள் எதுவும் மேற்கொள்ளாத வகையில், அவரது பெயரை கருப்பு பட்டியலில் (பிளாக் லிஸ்ட்) சேர்த்தும் கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.