சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த பெண்ணின் குழந்தை ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ஏழரை லட்சம் வீதம் ரூ. 15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க மாதம் 7,500 வீதம் 6 மாதம் வழங்கப்பட்டதுடன், டூவீலர் மற்றும் வீடும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனில் அரசு அக்கறை செலுத்தி உள்ளது அரசு நடவடிக்கைகளில் இருந்து தெரியவருகிறது. எனவே, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பான குற்ற வழக்கை சட்டப்படி தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.