சென்னை: அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக நித்தியானந்தம் என்பவர் மீது ராமதாஸ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த அனிதா ஆரோக்கிய மேரி, புகார்தாரரான ராமதாஸ் தயாரித்துக் கொடுத்த சமரச ஒப்பந்தத்தில் தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்திட செய்ததாக நித்தியானந்தம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வு, சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வாளருக்கு எதிராக வெறும் கண்டனம் மட்டும் பிறப்பிக்கப்பட்டதாகவும், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்கக் கோரி டிஜிபிக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி, நித்தியானந்தம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நித்தியானந்தத்தின் மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டார்.