கூடுவாஞ்சேரி: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(46). இவர் தொழிலதிபரும், காண்ட்ராக்ட்ராகவும் உள்ளார். இந்நிலையில், கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள ஆட்டோ மொபைல்ஸ் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் கூலிங் செய்யும் கம்ப்ரஸரை நேற்று மாலை சர்வீஸ் செய்யும் பணியில் சீனிவாசனும் ஈடுபட்டார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி (40), கூடுவாஞ்சேரி காந்தி நகரை சேர்ந்த பொன்ராஜ் (45) ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்படி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக கம்ப்ரஸர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கிருந்த 3 பேருமே தூக்கி வீசப்பட்டனர். இவர்களின், அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மூன்று பேரையும் மீட்டு பொத்தேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ வெங்கடேசஉதயகுமார் வழக்கு பதிவு செய்தார். பின்னர், அஜாக்கரதையாகவும், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் அமர்த்திய தனியார் கம்பெனி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.