சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனுர், வரதராஜபுரம், திருநாகேஸ்வரத்தில் 11.46 கோடி ரூபாய் செலவில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் மற்றும் 3.20 கோடி ரூபாய் செலவில் தியாகராய நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்து, 255.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்
சென்னை வெளிவட்ட சாலையிலுள்ள மீஞ்சூர், வெள்ளனூர், வரதராஜபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 11 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில், திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள், சிறார் விளையாட்டுப் பகுதிகள், யோகா தளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பசுமையான புல்வெளிகள், நடைபாதை, உயர் மின்விளக்குகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி பூங்காக்கள், சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கிரிக்கெட் ஆடுகளம், கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் மேஜைப்பந்து விளையாட்டு ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம், என மொத்தம் 14 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்
அய்யப்பன்தாங்கல் மாநகர பேருந்து நிலையத்தை 18 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவான்மியூர் மாநகர பேருந்து நிலையத்தை 28 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆவடி மாநகர பேருந்து நிலையத்தை 36 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாடியநல்லூர் மாநகர பேருந்து நிலையத்தை 10 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வள்ளலார் நகர் மாநகர பேருந்து நிலையத்தை 9 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தும் பணிகள்;
அசோக் நகரில் 12 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மகாகவி பாரதியார் நகரில் 7 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இந்திரா நகரில் 4 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ராஜா அண்ணாமலைபுரத்தில் 3 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலையில் 12 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள்;
அண்ணா நகரில் உள்ள நூலகத்தை 15 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பகிர்ந்து பணியாற்றும் இடத்துடன் கூடியதாக மேம்படுத்தும் பணி, காந்தி நகரில் உள்ள நூலகத்தை 24 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பகிர்ந்து பணியாற்றும் இடத்துடன் கூடியதாக மேம்படுத்தும் பணி;
எழும்பூர் ஹாரிங்டன் சாலையில் 13 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில் 8 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு மையம், ஆதம்பாக்கத்தில் 9 கோடியே 91 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு மையம் அமைக்கும் பணிகள்; சேத்துப்பட்டு பசுமைப் பூங்காவை 20 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி மற்றும் சித்தாலபாக்கத்தில் 3 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீருறிஞ்சிப் பூங்கா அமைக்கும் பணி,
கோவூரில் உள்ள கோயில் குளத்தை 4 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, நெமிலிச்சேரியில் புத்தேரி ஏரியை 6 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி; கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 3 கோடியே 71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணி; என மொத்தம் 255 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.