சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொதுக் கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, வரும் 30ம் தேதிக்குள் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து பொதுமக்களின் நலன் பேணப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சிதிலமடைந்து இடிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆகியவை குறித்து ஒரு விரிவான மற்றும் முழுமையான அறிக்கையினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப கவனம் செலுத்த வேண்டும். எனவே, ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பான அறிக்கையை அரசினுடைய மேலான கவனத்திற்கு கொண்டு செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்.