கோவை: கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரவீன், பிரியங்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அதில், ‘‘நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் அநாகரிகமான வார்த்தைகள், பெண்களை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறார். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் சமூக சீரழிவு ஏற்படும் நிலை உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை பொது வெளியில் விவாதிப்பது அவர்களின் தனியுரிமைக்கு எதிரானவை. எனவே இத்தகைய வீடியோக்களை வெளியிடும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.