ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகள் தொடங்கபட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால், பல்வேறு குற்றச்சம்பவங்கள் மற்றும் விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜலட்சுமி டிராவல்ஸ் நடத்தி வருபவர் அருள்முருகன்.
இவர் தனது டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம், 300க்கும் மேற்பட்ட பேருந்துகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த டிராவல்ஸ் நிறுவனத்தில், சிவானந்தம் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சிவானந்தத்திற்கு சொந்தமாக ஐந்து கார்கள் மற்றும் ஒரு கனரக லாரி வைத்துள்ளார். இந்த வாகனங்களை ராஜலட்சுமி டிராவல்ஸ் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கு இயக்கி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் உதவி மேலாளராக சீனிவாசன் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தீபாவளியன்று சிவானந்தம் சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று இரு தினங்கள் கழித்து ஸ்ரீபெரும்புதூர் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று ஆறு பேருந்துகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும், அதற்கு சிவானந்தம் தான் காரணம் என்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் உதவி ஆய்வாளர் துளசிராமனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின்பேரில் சிவானந்தத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.இதையடுத்து சிவானந்தம் ஜாமீனில் வெளியே வந்து, தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு அதில் தண்டனை அனுபவித்ததாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், சிவானந்தம் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கும், உதவி ஆய்வாளர் துளசிராமன் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்றுள்ளனர். இந்நிலையில் முறையாக விசாரணை நடத்தாமல்ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்த பரந்தாமன் இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர் துளசிராமன் ஆகிய இருவரை வடக்கு மண்டல ஐ.ஜி., பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.