புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவிற்கு எதிரான புகார் குறித்து மக்களவை நெறிமுறை குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பரிந்துரை செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து ஞாயிறன்று அவர் மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில் மஹூவா லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும், அவர் கடுமையான உரிமை மீறலில் ஈடுபட்டுளதாவும், அவையை அவமதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீதான புகாரை விசாரிப்பதற்காக விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் எம்பி மஹூவாவிற்கு எதிரான புகாரை சபாநாயகர் மக்களவையின் நெறிமுறைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து எம்பி மஹூவா கூறுகையில், ‘‘பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்களை சபாநாயகர் முடித்த பின்பு எனக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் நான் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.