சென்னை: வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக தேனாம்பேட்டை திருச்சபை போதகர் மீது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆண்ட்ரிவ் வாசுதேவன் (40) என்பவர் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், தேனாம்பேட்டை செயின்ட் தாமஸ் லூர்தன் திருச்சபைக்கு நான் வழிபட செல்வது வழக்கம். அப்போது, திருச்சபையின் போதகர் சுனில் மேத்யூ அறிமுகமானார்.
அவர், தனக்கு தலைமை செயலகம் மற்றும் காவல் துறையில் பல உயர் அதிகாரிகளை தெரியும், என்று கூறினார். அதை வைத்து, எனது உறவினரான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி என்பவருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், அவரது சகோதரி மலர்கொடிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ரூ.8 லட்சம் பெற்றார். ஆனால் அவர் சொன்னப்படி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்காததால், நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன்.
அதற்கு அவர் ரூ.2 லட்சம் மட்டும் திரும்ப கொடுத்தார். மீதமுள்ள ரூ.6 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். அதுபற்றி அவரிடம் கேட்ட போது, பணத்தை தர முடியாது என கூறி, கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீதும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வசந்தா மற்றும் சுதா ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த புகாரின்படி, திருச்சபை போதகர் சுனில் மேத்யூவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.