சென்னை: நட்பாக பழகி பிறகு நெருக்கமாக இருந்து, சாதி பெயரை கூறி ஏமாற்றி விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விக்ரமன் மீது பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த கிருபா முனுசாமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் லண்டனில் படித்துவிட்டு தற்போது உச்ச நீதிமன்ற மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவள். எனக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணை செய்திதொடர்பாளர் விக்ரமன் நட்பு கிடைத்தது. விக்ரமன் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். எனது பிறந்த நாள் அன்று அவர் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். எங்கள் நட்பு மிகவும் நல்ல நிலையில் இருந்தது. நான் சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அவர் பல உதவிகளை செய்தார். அவர் என்னை காதலிப்பதாக கூறி கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். அதன் பிறகு என்னிடம் பல வகையில் ரூ.13.7 லட்சம் வாங்கினார். அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு, புதிதாக கார் வாங்கப்போவதாக கூறினார். அதற்கு நான் பழைய கார் இருக்கும் போது ஏன் புதிய கார் வாங்குகிறாய் என்று கேட்டேன். பிறகு புதிய கார் வாங்கும் அளவிக்கு பணம் உன்னிடம் இருப்பதால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்துவிடு என்று கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே என்னை சமாதானம் செய்து கடந்த மார்ச் 31ம் தேதி திருக்கோவிலூர் சென்றோம்.
நள்ளிரவு நேரம் என்றதால் இருவரும் ஒன்றாக தங்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது எனக்கு ஆசைவார்த்தைகள் கூறி விக்மரன் என்னுடன் நெருக்கமாக இருந்தார். பிறகு நான் விக்ரமனிடம் தனியாக இருவரும் ‘அறம் வெல்லும்’ என்ற அமைப்பை தொடங்கலாம் என்று கூறினேன். அதன்பிறகு என்னுடனான நட்பை விட்டு விலகினார். அதுகுறித்து நான் கேட்ட போது அவர் என்னை சாதி பெயரை கூறி மிகவும் தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து நான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து புகார் அளித்தேன். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைத்து உத்தரவிட்டார். ஆனால் விக்ரமன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னிடம் இரண்டரை ஆண்டுகளில் பல தவணைகளில் வாங்கிய ரூ.13.7 லட்சத்தில் ரூ.12 லட்சத்தை திரும்ப கொடுத்தார். ஆனால் மீதமுள்ள ரூ.1.7 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்கவில்ைல. அது குறித்து கேட்டபோதும், என்னை மிகவும் ஆபாசமாக பேசியும், எனது சாதி பெயரை கூறி உதாசீனப் படுத்தினார். எனவே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராக உள்ள விக்ரமன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் அளித்துள்ளார்.