சூலூர்: கோவை அருகே உள்ள சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண். இவர் தனது மகள், மகனுடன் வசித்து வருகிறார். மகள் பிளஸ்-2 மாணவி. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இளம்பெண் தனது மகன், மகளுடன் மாயமானார். இது தொடர்பாக சூலூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 9.45 மணிக்கு அந்த பெண் தனது மகன், மகளுடன் சூலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.
உறவினர் ஒருவரின் தொல்லை தாங்காமல் மாயமானதாக தெரிவித்த அந்த பெண், அந்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரையிடம் புகார் அளித்தார். விசாரணையின்போது பெண்ணின் மகள் பிளஸ் 2 படிப்பதை அறிந்த இன்ஸ்பெக்டர், ‘‘நடவடிக்கை கட்டாயம் எடுக்கிறோம். அதற்கு முன்பு உங்கள் மகளுக்கு பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது. அவரை தேர்வு எழுத அனுமதியுங்கள்’’ என்று கூறினார். இதற்கு தாய் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஒரு பெண் போலீசை மாணவியுடன் அனுப்பி தேர்வு எழுத செய்தார்.
தேர்வு அலுவலரை போனில் தொடர்புகொண்டு விபரத்தை கூறி தாமதமாக மாணவி வந்தாலும் தேர்வுக்கு அனுமதிக்க கேட்டுக்கொண்டார். மாணவியிடம், ‘‘கவனத்தை சிதறவிடாமல் தேர்வு எழுதவேண்டும். கல்விதான் யாராலும் களவாட முடியாத சொத்து’’ என்று கூறி வாழ்த்தி அனுப்பினார். மாணவியும் இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத சென்றார். இன்ஸ்பெக்டரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வட்டார கல்வி அலுவலர் போனில் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டரை பாராட்டினார். அப்பகுதி மக்களும் அவரை பாராட்டினர்.