சுவா: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்று பிஜி நாட்டின் சுவா நகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய முர்முவை பிஜி பிரதமர் சிட்டிவேனி ரபுகா முறைப்படி உபசரித்து வரவேற்றார்.
இதைதொடர்ந்து பிஜி குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் ரத்து வில்லியம்ஸ் மைவல்லி கடோனிவேருடன் திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் முர்முவுக்கு அந்நாட்டு அதிபர், பிஜி நாட்டின் மிக உயரிய விருதான கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி என்ற விருதை வழங்கி கவுரவித்தார்.